Descriptions
கல்வித் துறை சார்ந்து எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு அரசாங்கம் விரைவில் தீர்வுகாணும் அதே வேளை நாட்டின் கல்வித் திட்டத்தை எதிர்கால நலன்களைக் கருத்தில் கொண்டு நவீனமயப்படுத்தி வரும் செயன்முறையை முன்னெடுத்துள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
புனித ஜேஸப் கல்லூரியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அமைச்சர் கடந்த இரண்டரை வருடங்களாக அரசாங்கம் கல்வித்துறை தொடர்பான பல்வேறு முன்னேற்றகரமான தீர்மானங்களை நடைமுறைப்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
''நான் அமைச்சராக பதவி ஏற்கும் போது நாட்டிலுள்ள 10053 தேசிய பாடசாலைகளில் 65% பாடசாலைகளுக்கு மாத்திரமே மின்சாரம் கிடைத்தது. தற்போது அதனை 95% மாக மாற்றியுள்ளோம்.
18500 புதிய திட்டங்களை அண்மையிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை என்ற திட்டத்தினூடாக அறிமுகப்படுத்தியுள்ளோம்.கடந்த இரண்டரை வருடங்களில் 26000 கழிவறைகள் பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
நாம் அறிமுகப்படுத்தியுள்ள சுரக்ஷா காப்புறுதி தேசிய பாடசாலை மாணவர்களுக்கு மாத்திரமானதல்ல. மாறாக தனியார் பாடசாலை மாணவர்கள் உட்பட அனைத்து மாணவர்களுக்குமானது என்றும் அவர் தெரிவித்தார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரையாற்றிய கல்வி அமைச்சர், இவ்வருடம் முடியடையும் முன்னர் 150000 டெப்டொப் கணனிகளை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
உயர் தரத்தில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஐபேட் களை வழங்கும் செயற்றிட்டமும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
எதிர்வரும் வருடங்களுக்குள் வகுப்பறையில் காணப்படக்கூடிய உயர்ந்த பட்ச மாணவர் எண்ணிக்கையை 35 ஆகக் குறைக்க திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்த அமைச்சர் 150 பாடசாலைகளில் அமுல்படுத்தப்படவுள்ள ஸ்மார்ட் வகுப்பறை திட்டம் தொடர்பாகவும் கருத்துத் தெரிவித்தார்.
பத்தாயிரம் முதல் பதினைந்தாயிரம் வரையான புதிய ஆசிரியர் நியமனங்களை வழங்கவுள்ளதாகவும் கல்விக் கல்லூரிகளுக்கு உள்ளீர்க்கும் மாணவர் எண்ணிக்கையை 1500 ஆல் அதிகரிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.