Descriptions
சவூதி அரேபிய இளவரசர் முஹம்மத் பின் சல்மான் இவ்வாரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனது பரிவாரங்களுடன் பாகிஸ்தானை தரிசிக்கிறார். இப்பரிவாரத்தில் முதலீட்டாளர்கள், அரச அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அடங்குகின்றனர். இந்த விஜயத்தின் போது பாகிஸ்தானில் 20 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதி வாய்ந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தானின் முதலீட்டு சபையின் தலைவர் ஹாரூன் ஷரீபின் கருத்துப்படி சக்தி வள துறையிலேயே அதிக முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது. அத்தோடு, தென் மேற்கு கடற்கரை நகரமான குவார்டர் நகரத்தில் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை ஸ்தாபிப்பதிலும் முதலீடு மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த முதலீட்டு திட்டங்களாவன, கடந்த அக்டோபர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சவூதி அரேபியாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின் பின்னர் அறிவிக்கப்பட்ட 6 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவி பொதியை தொடர்ந்து, ஆறு மாதங்களேனும் கடக்காத நிலையிலேயே வருகின்றன.
குறிப்பாக சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் காசோக்கி கொலை விவகாரத்தில் முஹம்மத் பின் சல்மான் சிக்கியிருந்த மற்றும் உயர்தர முதலீட்டு மாநாடான Future Investment Initiative மாநாட்டை பல மேற்கு நாட்டு முதலீட்டாளர்கள் புறக்கணித்திருந்த ஒரு நேரத்திலேயே இம்ரான்கான் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். அத்தோடு, சவூதி அரேபியாவுடன் இருப்பதற்காக அவர் முறையாக கௌரவிக்கவும்பட்டார். ஆனால், இந்த பில்லியன் டொலர் உதவியானது பாகிஸ்தானின் கடன் நெருக்கடியை நிறைவு செய்வதற்கு போதுமானதாக இருக்கவில்லை.
இப்போது சவூதி அரேபியா பல பில்லியன் முதலீட்டை மீளவும் வாக்களித்து இருக்கின்றது. இது பாகிஸ்தான் தற்போதுள்ள பொருளாதார நெருக்கடியிலிருந்து வெளியே வருவதற்கான ஒரு இடைக்காலத் தீர்வாக அமையும். ஆனால், இந்த நிதி எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழங்கப் படுவதற்கான வாய்ப்பு குறைவு.
பிராந்தியத்தில் சவூதி அரேபியாவின் எதிரியான ஈரானிற்கு அண்மையில் பாகிஸ்தான் அமைந்திருப்பதனால், சவூதி அரேபியாவுக்கு பாகிஸ்தானில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நலன்கள் உள்ளன.
(பாகிஸ்தான் ஊடகவியலாளர் தாஹா சித்தீகியின் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி)
தமிழாக்கம்: அஷ்கர் தஸ்லீம்