Descriptions
எஸ்.எம்.கமால்தீன் 'கடல் கட்டி' என்ற பெயரில் இலங்கைச் சோனகரின் பாரம்பரியத் தொழிலான முத்துக்குளிப்பை மையமாகக் கொண்டு ஒரு நாவலை எழுதியுள்ளார்.இதில் மன்னார்,சிலாபம்,மாந்தை போன்ற கடற்பரப்பில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக முத்துக்குளிப்பு தொழிலை மேற்கொண்டு வந்ததாகக் குறிப்பிடுகிறார்.
இலங்கையில் முத்துக்குளிப்பு எனும் போது மன்னார் குடாவின் முத்துக்குளிப்பையே குறிக்கின்றது.புவியியல் ரீதியாக மன்னார் குடாப்பிரதேசம் முத்துச் சிப்பிகளின் வளர்ச்சிக்கு மிகச் சாதகமாகக் காணப்படுகிறது.
முத்துச்சிப்பிகள் வளரும் இடங்கள் பார்கள் என்று அழைக்கப்படுகின்றன.மன்னார் தீவிலிருந்து நீர்கொழும்புக்கு இடைப்பட்ட கடல் பிரதேசத்தில் முத்துச்சிப்பிகள் வளரக்கூடிய 19 பார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.இதில் பிரபல்யம் பெற்ற பார்கள் கொண்டச்சி,கரைத்தீவு,அரிப்பு,
பெரியகரை,கல்லித்திடல் என்பனவாகும்.இப்பிரதேசம் அனைத்திலும் முஸ்லிம்கள் பன்னெடுங்காலமாக வாழ்ந்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.
பிரித்தானிய ஆட்சியாளர்கள் (கி.பி.1796 - 1887) மன்னார் பகுதியில் முத்துக்குளிப்பில் ஈடுபட்டதாக Boake குறிப்பிடுகிறார்.இதற்கு உதவியவர்கள் சோனகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடலில் ஏறக்குறைய 40 - 50 அடி ஆழத்திற்கு சுழியோடக்கூடியவர்களால் கடல் அடித்தளத்திலிருந்து முத்துச் சிப்பிகள் எடுக்கப்படுகின்றன.முஸ்லிம்கள் செறிந்து வாழும் முசலிப்பிரதேசம் இதற்கு எடுத்துக்காட்டாகும்.
நன்றி
- சோனகத் தேசம் -