Descriptions
முத்துச் சிலாவத்துறை மக்கள் தங்களது சொந்த நிலங்களை மீள மீட்டுக் கொள்வதற்கான போராட்டத்தை இன்று 07 ஆவது நாளாகத் தொடர்கின்றனர்.
முசலி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட சுமார் 28 ஊர்களின் கேந்திர நகரமாகவும் முத்துக்குளிப்புக்குப் பெயர்போனதாகவும் பல புராதன வரலாற்றுச் சிறப்பம்சங்களைக் கொண்ட முத்துச் சிலாவத்துறை ஒரு தசாப்தகாலமாக அதன் தலைமைத்துவப் பொலிவை இழந்து நிற்கிறது.
யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்தும் இம் மக்களது காணிகளை கடற்படையிடமிருந்து வழங்காமல் அசமந்தப் போக்கை கடைபிடித்துவரும் அரசாங்கத்திற்கு தங்களது அழுத்தத்தை உரத்து உரைக்க முத்துச் சிலாவத்துறை மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு இம் மண் மீட்புப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
பாசிசப் புலிகளின் பயங்கரவாதத்தால் 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக இடம்பெயர்ந்த முத்துச் சிலாவத்துறை மக்கள் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்ததும் தங்களின் மூதாதையர்களும் தாங்களும் வாழ்ந்து வந்த சொந்த நிலங்களில் மீளக் குடியமராமல் பல இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
1990 ஆம் ஆண்டு இடம் பெயர்வதற்கு முன்னர் சுமார் 250 குடும்பங்களாகக் காணப்பட்ட சிலாவத்துறை தற்போது 625 குடும்பங்களைக் கொண்டு இட நெருக்கடியில் தத்தளிக்கும் நிலையிலே, சுமார் 218 குடும்பங்களுக்குச் சொந்தமான 36 ஏக்கர் காணிகளை கடற்படையினர் ஆக்கிரமித்துள்ளனர்.
வாழ்வளித்த மண்ணில் வாழ்வியலுக்கான உரிமையின்றி இம்மக்கள் அடர்ந்த காட்டுப் பகுதிகளிலும் குடியிருப்புக்கு பொருத்தமற்ற இடங்களிலும் நிலைகொண்டு சொல்லெனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
சொந்த பூமியில் நடமாடும் சுதந்திரம் மறுக்கப்பட்ட இம்மக்களின் போராட்டம் அரசியல்வாதிகளினதும் அரசாங்கத்தினதும் செவிகளில் ஒழிக்கும் வரை நீட்சியுறும்.