முசலியின் வசந்தம் உருவாக இளைஞர்கள் முன்வரவேண்டும் - பிரபல சமூகசேவகர் மிஹ்லார் வேண்டுகோள்
Descriptions
முசலியின் முன்னேற்றம், விடிவு இளைஞர்களின் கைகளில் தங்கியுள்ளது. ஒரு சமூகம் கல்வியில் மேலோங்கும் போது எதிர்காலத்தில் தன்னை ஆளும் சக்தியாக கட்டமைத்துக்கொள்கிறது. அந்தவகையில் யுத்தத்தில் பாதிக்கப்பட்ட முசலிப் பிரதேசம் நிலையான அபிவிருத்தியை விரும்பினால் அரசியல் அடிமைத்தனத்தை நீங்கவும் முசலி வசந்தமடையவும் இளைஞர்கள் அயராது உழைக்க வேண்டும் என பிரபல சமூக சேவகர் திரு. மிஹ்லார் அவர்கள் முசலி தேசிய பாடசாலையில் இடம்பெற்ற உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போது மேற்படி வேண்டுகோள்களை விடுத்தார்.
இம்முறை சாதாரண தர பரீட்சை எழுதிய மாணவர்களுக்கு முசலி வள நிலையம் (MRC) மற்றும் முசலி YMMA கிளையும் இணைந்து உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றை 23/12/2018 ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்த சமூக சேவகர் மிஹ்ளார் அவர்கள் மேலும் கூறியதாவது;
வடக்கில் முஸ்லிம்கள் செறிவாக வாழும் பிரதேசம் முசலியாகும். இங்கு எமது மக்கள் கடந்த 9 வருடங்களாக மீள்குடியேறி வாழ்ந்துவரும் நிலையில் எல்லாக் கிராமங்களும் அதிக தேவையுடையதாக உள்ளன. உட்கட்டமைப்பு வசதிகள் செய்யப்படவில்லை. அடிப்படை வீட்டு வசதிகள் கூட நிறைவேற்றிக்கொடுக்கப்படாமல் மக்கள் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள். பஸ் நிலையம், பொதுக் கட்டிடங்கள், தபால் நிலையம், வைத்தியசாலை வசதி, இலத்திரனியல் வங்கச் சேவை, பெற்றோல் நிலையம் என்பன கூட இன்னும் உருவாக்கப்படவில்லை.
ஆனால் அருகில் இருக்கும் முருங்கன், நானாட்டான் நகரம் அழகிய முறையில் நிர்மாணிக்கப்பட்டு மக்கள் தங்களது கருமங்களை இலகுவாக மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, கட்சி அரசியல் அடிமை விலங்கை இல்லாமலாக்கும் போராட்டத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கல்விரீதியாக பங்காற்ற வேண்டும் என அறைகூவல் விடுத்தார்.
மேலும், இந்நிகழ்வில், சட்டத்தரணி முபாரக், முசலி தேசிய பாடசாலை அதிபர் உவைஸ், பாலைக்குழி பாடசாலை அதிபர் முப்தி, YMMA செயலாளர் சபீர், MRC செயலாளர் சியாத், ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர். அத்துடன், ஆசிரியர் ஜென்சிர், முஜாகிர், அன்பர், ஜெசீர், துஸ்யந்தன், பமீஸ், பகட், மற்றும் அர்சட் ஆகியோர் துறைசாரந்த வளவாளர்களாக கலந்து சிறப்பித்தனர்.