Descriptions
முசலி மக்களில் ஒரு பகுதியினர் மீள்குடியேறியுள்ள போதிலும் இன்னும் அவர்கள் அமைதியான வாழ்க்கைச் சூழலுக்குத் திரும்பவில்லை.
மக்களின் அறியாமை, வறுமை, அரசியல் வெறித்தனம் என்பன இத்தகைய துன்பியல் நிலைக்கு முக்கிய காரணங்களாகும்.
தொழில் முயற்சி, பிள்ளைகளின் கல்வி, மார்க்க செயற்பாடுகள், பண்பாடான நடத்தை, உறவுகளைப் பேணல், பிரயோசமான பொழுது போக்குகள், பிறர் நலன் பேணல் போன்றவற்றில் போதுமான கவனம் செலுத்தப்படுவதில்லை.
அவ்வப்போது சில வீடுகள், சில வாழ்வாதாரப் பொருட்கள் வரும். தேவையுடையோரின் எண்ணிக்கை அதிகமிருக்கும். அவை முறைப்படி வழங்கப்படவும் மாட்டா. முட்டிமோதி, அடிபிடிப்பட்டு, அவமானம் பெற்று, அலைக்கழிக்கப்பட்டு சிலருக்குக் கிடைக்கப்பெறும்.
இவ்வாறே எப்போதாவது கொஞ்சம் தெருவிளக்குகள் வரும். பல கிராமங்களில் தேவையுடைய பல இடங்கள் இருக்கும். மறுபடி என்ன!
சில முட்களுக்காக இறைச்சிக்கடையில் நாய்கள் சண்டையிடுவது போல் முசலிப் பிரதேச சபை உறுப்பினர்களின் நிலை காணப்படுகிறது. காரணம், முசலி குறித்த எவ்வித அடிப்படை அறிவும் இன்றி கால இட பரிமாண சூழலை அறியாது அரசியல் சுயலாபம் அடைய முனைகின்றனர். இதில் மாற்றம் வரவேண்டும்.
எனவே, முசலியில் கல்வி கற்ற சமூகம் பிரதேச மட்ட, தேசிய அரசியலில் உள்வாங்கப்படவேண்டும். தேசிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் தலைமைகள் இதில் கவனம் செலுத்தவேண்டும். அரசியல் சுயலாபங்களுக்காக எமது மக்களின் கல்வி, சமூக, பொருளாதார நிலைகள் குறித்த அடிப்படை அறிவற்ற அரைவேக்காடுகள் பிரதேச மட்டத்திலும் சரி தேசிய மட்டத்திலும் சரி தேர்தல் களத்தில் நிறுத்தாமல் இருக்க அரசியல் சமூக தலைமைகள் கவனம் செலுத்துவது காலத்தின் தேவையாகும்.
நன்றி:
முகுசின் றயீசுத்தீன்