பிரச்சினைகளை மனதில் தூக்கி சுமந்துகொள்வதே மகிழ்சியற்ற வாழ்வுக்கு காரணம் - Dr. Fajila Azad
Descriptions
மகிழ்ச்சி என்பது ஒரு மாயை தானே… சந்தோசிப்பதும் குதூகலிப்பதும் குழந்தைகளுக்கு வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம். ஒன்று மாற்றி ஒன்று என்று ஏதாவது பிரச்னைகள் வரிசை கட்டி வரும் போது, அதைப் பற்றிய சிந்தனை எழாமல், எந்த வருத்தமும் இல்லாமல் எப்படி, இயல்பாக, மகிழ்ச்சியாக இருக்க முடியும்?
பிரச்னைகள் சூடான பானம் இல்லை அதை உற்று உற்று பார்த்து ஊதி ஊதி ஆற்றுவதற்கு. அது ஊத ஊத பெரிதாகும் நெருப்புப் பொறி.
எந்த பிரச்சினையாக இருந்தாலும் நீங்கள் உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயங்களை நிறுத்தாமல் இயல்பாக செய்து கொண்டிருக்கும்போது உங்களுக்குள் எழும் நிதானமும், தன்னம்பிக்கையுமே அந்த பொறியை அனைத்து உங்கள் கவலைக்கு ஒரு மருந்தாகி உங்கள் மகிழ்ச்சியை தக்க வைக்கும்.
பொதுவாக1+1=2 என்பது மாதிரி ஒரு பிரச்னை நடந்தால் கவலையாகத்தானே இருக்க வேண்டும் என ஏதோ ஒரு பழக்கத்திற்கு கட்டுப்பட்டது போல் இயல்பை விட்டும் மாறி, மனம் கனத்து போவதே சரி எனத் தோன்றும்.
ஒரு சிறு பிரச்னை என்றாலும், அது தீரும் வரை, பொழுது போக்கு, சின்ன சின்ன சந்தோஷம் என்பவையே taboo வாக ஒரு தவிர்க்கப் பட வேண்டிய விஷயம் என்றே பலருக்கும் நினைக்கத் தோன்றுகிறது. அவமானமோ, தோல்வியோ, பிஸினெஸில் நஷ்டமோ, அவ்வளவு தான் காற்று கூட புக முடியாதபடி சந்தோஷக் கதவுகளை சாத்தி வைத்து மிரள்கிறீர்கள்.
பிரச்னைகளையே நினைத்துக் கொண்டிருக்கும்போது, இனி என்ன செய்ய வேண்டும் என உங்கள் லாஜிக்கல் பிரைன் வேலை செய்யாமல் ஸ்ட்ரைக் பண்ண, உங்கள் எமொஷனல் பிரைன், இப்படி செய்திருக்க வேண்டுமோ, அப்படி செய்திருக்க வேண்டுமோ என உங்கள் எண்ணங்களை அலை பாயச் செய்து நடந்த பிரச்னைகளையே மனம் மீண்டும் மீண்டும் அசை போடும்.
அது போல பிரச்னையின் மேலே உங்கள் கவனம் இருக்கலாமே தவிர பிரச்னையை உங்களுக்குள் எடுத்துக் கொண்டால் அது உங்களையே மூழ்கடித்து விடும். அதனால் எந்த பிரச்னையிருந்தாலும் உங்களை சுற்றி நடக்கும் சின்ன சின்ன சந்தோஷங்களில் கவனத்தை செலுத்தினால் அதுவே எந்த கவலைக்கும் ஒரு ஆன்டிபயாட்டிக்காக பிரச்னையின் தீவீரத்திலிருந்து உங்களைத் தற்காக்கும்.
உண்மையில் பிரச்னையின் ஆழத்தை விட அது தரும் வலியை விட அதை சற்றேனும் இறக்கி வைக்க முயலாமல் உங்கள் மனதில் தூக்கி சுமப்பதே உங்களுக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி மகிழ்ச்சியற்று தவிக்க செய்கிறது. சிறு டம்ளரில் கொஞ்சம் தண்ணீரை எடுத்துக் கொண்டு அப்படியே சற்று நேரம் சுமந்து பாருங்கள். காற்று போல இலகுவாக இருந்த அந்த டம்ளர், நேரம் ஆக ஆக உங்கள் கைகளுக்குள் சுளீர் என வலியை ஏற்படுத்தி, கைகள் கனத்து அசைவற்று போகுமளவு பாரமாகத் தெரியும்.
உண்மையில் சுமையில் இல்லை மனபாரம். மனபாரத்தில் இருக்கிறது சுமை.
நன்றி:
Dr.Fajila Azad, Life Coach.