Descriptions
கல்வி அமைச்சின் சமய விவகாரங்கள் தொடர்பான ஆலோசனை சபை உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு கடந்த 30 ஆம் திகதி கல்வி அமைச்சின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஐந்து சமயங்களையும் சேர்ந்த 132 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். இஸ்லாம் சமய ஆலோசனைக்குழுவிற்காக 23 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டனர். சீரற்ற காலநிலை காரணமாக பலர் சமூகமளித்திருக்கவில்லை.
அகில விராஜ் காரியவசம், ராஜாங்க அமைச்சர் வீ. ராதா கிருஷ்ணன், அமைச்சின் செயலாளர்கள், தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம், பரீட்சைகள் ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்நிகழ்வில் பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
சமயப் பாட ஆசிரியர் நியமனம், மாகாணங்களின் இழுத்தடிப்பு மற்றும் தகவல்கள் அனுப்பாமை முதலானவற்றால் கால தாமதமடைந்துள்ளதாகவும் 2018 ன் ஆரம்ப மாதத்தில் இந்நியமனங்கள் வழங்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.
வருகை தந்திருந்த உறுப்பினர்கள் நியமனக் கடிதங்களை அமைச்சரிடமிருந்தும் ராஜாங்க அமைச்சரிடமிருந்தும் பெற்றுக் கொண்டனர்.
இந்நியமனங்கள் 3 வருடங்களுக்கானது. கல்வித் துறை சார்ந்து எழும் சமயம் சார் பிரச்சனைகளுக்கான தீர்வுகளை ஆலோசனையாக முன்வைப்பது இச்சபையின் கடமையாகும்.
கல்வி அமைச்சின் முஸ்லிம் பாடசாலைகள் அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் தாஜுதீன், உதவிப் பணிப்பாளர் நவ்பர்தீன், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் அஷ்ஷேய்க் அப்துர் றஹ்மான், தேசிய கல்வி நிறுவகத்தைச் சேர்ந்த அஷ்ஷேய்க் ஜெஸார் ஜவ்பர், ஓய்வு பெற்ற ஆசிரியர் ரில்வான், கபூரிய்யா வளாகத்தின் மௌலவி லாபிர், ஸலாஹுத்தீன் முஸ்லிம், அஷ்ஷேய்க் நிஜாம்தீன் ஆகியோர் அன்றைய தினம் நியமனக்கடிதங்களை கல்வி அமைச்சரிடமிருந்து பெற்றுக் கொண்டனர்.