அறபு மத்ரஸா விரிவுரையாளர்களுக்கான கற்பித்தல் பயிற்சி – சான்றிதழ் வழங்கும் வைபவம்
Not allow reviews
Descriptions
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் அனுசரணையோடு இலங்கை திறந்த பல்கலைக்கழகம் நடாத்திய அரபுக் கல்லூரிகளில் கடமை புரியும் விரிவுரையாளர்களுக்கான கற்பித்தல் முறையியல் தொடர்பான பயிற்சி நெறியை வெற்றிகரமாகப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று காலை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில நடைபெற்றது.
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி.பி பக்கீர் ஜஃபார் மற்றும் இரண்டாம் மூன்றாம் நிலைக் கல்வித் துறையின் தலைவர் கலாநிதி எஸ். குகமூர்த்தி ஆகியோரின் தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி பிரதம அதிதியாக்க் கலந்துகொண்டார்.
வரவேற்புரை நிகழ்த்திய கலாநிதி குகமூர்த்தி அவர்கள் அறபு மத்ரஸாக்களில் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான இவ்வாறான பாடநெறி ஒன்றை நடாத்தக் கிடைத்தமை மூலம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் புதியதொரு துறையில் பிரவேசித்த்து குறித்து தான் மகிழ்ச்சி அடைவதாகக் குறிப்பிட்டார்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை இலங்கையிலுள்ள ஷரீஆக்க் கற்கை நிலையங்களின் விரி வுரையாளர்களைப் பயிற்றுவிப்பதற்கான தனியான பயிற்சி நிலையம் ஒன்றை ஸ்தாபிக்கவேண்டும் என இங்கு உரை நிகழ்த்திய கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் பீ.சி. பி. பக்கீர் ஜவ்பர் அவர்கள் தெரிவித்தார்.
பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உ ரையாற்றிய ஜம்மியதுல் உலமா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் எம். ஐ. எம். ரிஸ்வி முப்தி, இவ்வாறான ஒரு நிகழ்வுக்காக பல வருடங்களுக்கு முன்னரிலிருந்தே ஜம்மிய்யா எதிர்பார்த்திருந்ததாகக் குறிப்பிட்டார்.
மிக ஆரம்ப காலங்களில் இருந்தே இவ்வாறான தேவை உணரப்பட்டது. ஆயினும் தற்போதேனும் இது சாத்தியமாகியுள்ளமை மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்த அவர், இந்த பயிற்சிகளை எதிர்வரும் காலங்களில் ஏனைய பிரதேசத்து விரிவுரையாளர்களும் பயன்பெறும் வகையில் விஸ்தரிக்க வேண்டிய தேவையுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் இவ்வாறான வாய்ப்புக்கள் மற்றும் ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளமைக்கு நன்றியும் தெரிவித்தார்.
பாடநெறியை வெற்றிகரமாக நிறைவு செய்த 24 மாணவர்களுக்கான சான்றிதழ்களை அதிதிகளும்
விரிவுரையாளர்களும் வழங்கி வைத்தனர்.
பாடநெறியின் இணைப்பாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் மு. நவாஸ்தீன நன்றியுரை நிகழ்த்தினார். அவர் தனது நன்றியுரையில் இந்த பாடநெறி எவ்வாறு ஆரம்பமானது என்றும் இதன் பின்னணியில் பணியாற்றிவர்கள் தொடர்பாகவும் பல்வேறு விடயங்களை பகிர்ந்து கொண்டதோடு இப்பாடநெறியை வெற்றிகரமாக நடாத்திச் செல்வதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சிகளை இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஜே.டீ. கரீம்தீன் தொகுத்து வழங்கினார்.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சரூக்தீன் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி என். கபூர்தீன் மற்றும் தேசிய கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர்களான ஷிபான் ஷாஜஹான் மற்றும் ஜெஸார் ஜவ்பர் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையின் செயலாளர் அஷ்ஷேய்க் முபாரக் மதனி அவர்களும் மௌலவி தாஸிம் அவர்களும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.