மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துங்கள்- கல்வி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டம்
Not allow reviews
Descriptions
மௌலவி ஆசிரியர் நியமனத்தை துரிதப்படுத்துமாறு கோரி மௌலவிமார்கள் மற்றும் மௌலவியாக்கள் அடங்கிய குழு ஒன்று இன்று மாலை கல்வி அமைச்சின் முன் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டது.
ஆர்ப்பாட்த்தில் கலந்து கொண்டவர்கள் நியமனத்தைத் துரிதப்படுத்துமாறு கோரும் சுலோகங்களை ஏந்தியிருந்தனர்.
சுமார் 70-80 மௌலவிமார்களும் மௌலவியாக்களும் இவ்வார்ப்பட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
மௌலவி ஆசிரியர் சங்கமும் 2006 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றி நியமனம் பெறாதவர்களும் இணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் கல்வி அமைச்சு மௌலவி ஆசிரியர் நியமனங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அது தொடர்பான வர்த்தமாணி அறிவித்தல் வௌியாகவுள்ளதாகவும் தெரிவித்தது.
எனினும் எதிர்பார்த்தவாறு வர்த்தமாணி அறிவித்தல் வௌிவரவில்லை. எனவே தாமதமையும் இந்நியமனத்தை துரிதப்படுத்துமாறு ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரினர்.
இதே நேரம் இந்நியமனங்கள் தொடர்பான சில சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகளின் காரணமாக விண்ணப்பம் கோரல் தாமதடைந்துள்ளதாக கல்வி அமைச்சு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், 2006 ஆம் ஆண்டு பரீட்சைக்குத் தோற்றியவர்களுக்கு 11 வருடங்களுக்குப் பின்னர் அதே பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் நியமனங்களை வழங்க கல்வி அமைச்சு தயாராக இல்லை என்றும் அறிய முடிகின்றது.
கல்வி அமைச்சு இந்நியமனங்களுக்காக புதிதாக விண்ணப்பங்களைக் கோரவுள்ளதுடன் போட்டிப் பரீட்சை ஒன்றின் அடிப்படையிலும் நேர்முகத் தேர்வின் அடிப்படையிலும் நியமனங்களை வழங்கும் வழமையான நடைமுறையை இந்நியமனங்களிலும் பேண உள்ளதாக அறிய முடிகிறது.
இன்றைய ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மௌலவியாக்கள் கலந்து கொண்டிருந்தமை அவதானிக்கத்தக்கது.